Designed by Iniyas LTD
இந்துத்துவா வெறியோடு செயல்படும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் – தி.வேல்முருகன்
சென்னை ஐ.ஐ.டியில் பெரியார்- அம்பேத்கர் மாணவர் அமைப்புக்கு தடை விதித்தற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் .தி.வேல்முருகன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை இந்திய தொழில் நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி) “பெரியார்- அம்பேத்கர் மாணவர் அமைப்புக்கு தடை விதிப்பதா? என்று வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்துத்துவா வெறியோடு செயல்படும் மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
சமூக நீதியின் தாயகமான தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னையில் இயங்கி வரும் சென்னை இந்திய தொழில் நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி) தந்தை பெரியார் – அண்ணல் அம்பேக்தர் பெயரில் மாணவர் அமைப்பு செயல்படுவதற்கு மத்திய அரசு தடை விதித்திருப்பதாக அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகி உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டில் வாழுகிற 97% மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட நிலையில் இந்த மண்ணின் மக்களின் விடுதலைக்காக தலைமையேற்று களமாடியவர் தமிழர் தலைவர் தந்தை பெரியார். ஜாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட உறவுகளுக்காக உரத்துக் குரல் கொடுத்து உரிமைப் போர் நடத்தியவர் அண்ணல் அம்பேத்கர்.
இத்தகைய மாமனிதர்களால்தான் இன்றளவும் தமிழ்ச் சமூகமும் ஒடுக்கப்பட்ட உறவுகளும் சுயமரியாதையுடனும் மான உணர்வுடன் இந்த மண்ணிலே நடமாட முடிகிறது. இருந்த போதும் இதே இந்த தமிழ் மண்ணில் சென்னை அய்.அய்.டி. போன்ற கல்வி நிறுவனங்கள் இன்னமும் மண்ணின் மக்களாகிய தமிழருக்கு எட்டாக்கனியாகவே மூடப்பட்ட ‘கருவறையாகவே’ இருந்து வருகிறது.
இந்த சென்னை இந்திய தொழில் நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி) தான் உலகம் போற்றும் கணிதமேதையான தமிழக அரசின் “கல்பனா சாவ்லா” விருது பெற்ற அம்மையார் வசந்தா கந்தசாமி போன்றவர்கள் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஒடுக்குமுறையை எதிர்த்து சமூக நீதிக்காக துணிச்சலுடன் போராடி வருகின்றனர்..
இதோ தற்போது மத்தியிலே அமர்ந்திருக்கிற இந்துத்துவா வெறி அரசு, தந்தை பெரியார்- அண்ணல் அம்பேத்கர் பெயரில் ஒரு மாணவர் அமைப்பு இந்திய தொழில் நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி) செயல்பட்டு வந்ததை தடை செய்துள்ளது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளிகளின் பெயரிலான மாணவர் அமைப்பானது, இந்துத்துவாவின் கோர முகத்தை அம்பலப்படுத்தியது என்ற ஒற்றை காரணத்துக்காக இத்தடையை விதித்துள்ளது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டு மண்ணில் தமிழர் தலைவர் தந்தை பெரியார் பெயரில் ஒரு அமைப்பு இயங்கக் கூடாது என்று இந்திய பேரரசு தடை விதித்திருப்பது நமது சுயமரியாதைக்கு விடுக்கப்பட்டிருக்க மிகப் பெரும் அறைகூவல்!
இது அப்பட்டமான தமிழினத்தின் மீதான கொடூரமான ஒடுக்குமுறை- இது ஒரு இந்திய அரச பயங்கரவாதமே.. இந்த அட்டூழிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுகிற சென்னை இந்திய தொழில் நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி) மாணவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமையாக ஆதரவளித்து அவர்களுடன் களத்தில் நின்று போராடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய தொழில் நுட்ப கழகம் (ஐ.ஐ.டி) போன்ற கல்வி நிறுவனங்களை சாமானியவர்களுக்கும் ஏற்ற இடமாகவும் சமூகநீதி நிலைநாட்டப்படுகிற இடமாகவும் மாற்றுவதற்கான போராடுகிற தருணமும் இதுவே! ஜாதி, மத, கட்சிகளைக் கடந்து தமிழராய் இந்த அறப்போரில் பங்கேற்று தமிழிரின் இனமான உணர்வை இந்தியப் பேரரசுக்கு உணர்த்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.