தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கையில் உள்நாட்டு விசாரணை மூலம் நீதி கிடைக்காது: ஐ.நா. அறிக்கை

UN_exteriorஇலங்கையில் 2002 – 2011 காலகட்டத்தில் மிகக்கொடூரமான மனித உரிமை மீறல்களும், அதிகார துஷ்பிரயேகங்களும் நடந்திருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைமையகத்தில் இன்று (புதன்கிழமை) இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

அப்போது, மனித உரிமைகளுக்கான ஐ.நா. ஆணையர் அல் ஹூசைன், “ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், இலங்கையில் 2002 – 2011 காலகட்டத்தில் திகிலூட்டும் வகையிலான மனித உரிமை மீறல்களும், அதிகார துஷ்பிரயேகங்களும் நடந்திருக்கின்றன. இலங்கை இறுதிகட்ட போரின்போது இலங்கை ராணுவம், விடுதலைப்புலிகள் என இரண்டு தரப்பினரும் போர்க்குற்றங்களின் ஈடுபட்டன. இத்தகைய சூழலில் இலங்கை போர்க்குற்றம் குறித்து உள்நாட்டு விசாரணை மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய முடியாது. எனவே சிறப்பு சர்வதேச நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். இதில் சர்வதேச நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட வேண்டும்.

பாரபட்சமின்றி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நீதிக்கு அப்பாற்பட்டு கொலைகள் பல நடந்துள்ளன. போரின்போது பலர் மாயமாகியுள்ளனர். மனதை பதைபதைக்க வைக்கும் வன்கொடுமைகள் நடந்துள்ளன. பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றுள்ளன. இறுதிகட்ட போரின்போது குழந்தைகளை விடுதலைப்புலிகள் படைகளில் சேர்த்துள்ளனர். குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும் நடந்துள்ளன.

மொத்ததில் இலங்கையில் கடந்த 2002 முதல் 2011 காலகட்டம் வரை நடந்த பல்வேறு போர்க்குற்றங்களையும் சர்வதேச சமூகம் உற்று கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்

Comments
Loading...