Designed by Iniyas LTD
24 மணி நேரம் பரோலில் வெளியே வந்துள்ளார் நளினி!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி 24 மணி நேரம் பரோலில் விடுதலை செய்யப்பட்டார்.
வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருப்பவர் நளினி. இவரது தந்தை சங்கரநாராயணன் பிப்ரவரி 23-இல் காலமானார். சென்னையில் 24-இல் நடைபெற்ற இறுதிச் சடங்கில் பங்கேற்க நளினிக்கு ஒரு நாள் “பரோல்’ வழங்கப்பட்டது. சங்கரநாராயணனின் 16-ஆவது நாள் உத்தரகிரியை சடங்கு புதன்கிழமை நடைபெற உள்ளது. இதற்காக மூன்று நாள் “பரோல்’ அனுமதி கோரி சிறை கண்காணிப்பாளரிடம் நளினி அளித்த மனு ஏற்கப்படவில்லை.
இந்த நிலையில், தனக்கு 3 நாள்கள் “பரோல்’ வழங்க சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
நளினிக்கு செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி முதல் புதன்கிழமை மாலை 4 மணி வரை “பரோல்’ வழங்க வேண்டும். நளினியை சென்னைக்கு தகுந்த பாதுகாப்புடன் போலீஸார் அழைத்துவர வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நளினி யாருக்கும் பேட்டி கொடுக்கக் கூடாது என்றார். இதையடுத்து, வழக்கை வியாழக்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
நீதிமன்ற உத்தரவை அடுத்து, வேலூர் பெண்கள் சிறையிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை 5.35 மணிக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் பிலிப் கென்னடி தலைமையிலான போலீஸார் நளினியை சென்னைக்கு அழைத்துச் சென்றனர். இரவு வீட்டை சென்றடைந்தார். அந்த வீட்டைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.