தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அம்மா உணவகம் பற்றி கேட்டறிந்த சீனா அதிகாரிகள்

சீன நாட்டில் உள்ள மாநகரங்களும், இந்திய நாட்டில் உள்ள மாநகரங்களும் நிர்வாகம் ஒத்துழைப்பு மற்றும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் விதமாக இருநாட்டு வெளியுறவு துறைகள் மத்தியில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ம் ஆண்டு சீன நாட்டுக்கு சென்றபோது, இந்த ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார்.  amma

இதைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சியும், சீன நாட்டின் சொங்கிங் மாநகராட்சியும் சகோதர நட்பு நகரங்களாக செயல்படுவது என்று ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.  இரு மாநகரங்களும் சகோதர நட்பு நகரமாக திகழவேண்டும். இரு மாநகரங்களில் உள்ள அதிகாரிகள் தொடர்பை ஏற்படுத்தி பராமரிக்கவேண்டும். கல்வி, கலாச்சாரம், விளையாட்டு, இளைஞர் நலன், நகர்புற திட்டமிடல், கழிவுநீர் மேலாண்மை, உள்கட்டமைப்பு வசதிகள், சுற்றுச்சூழல், பொதுசுகாதாரம், வணிகம், வியாபாரம் ஆகியவைகளுக்கு இரு மாநகரங்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்பது உள்பட பல விதிமுறைகள் உருவாக்கப்பட்டன.

இதன்படி, கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, சீன நாட்டுக்கு சென்று, சொங்கிங் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும்படி பணிகள் குறித்து ஆய்வு செய்து வந்தார்.  இதனைத்தொடர்ந்து, சீன நாட்டின் சொங்கிங் மாநகர மேயர் ஹூவாங் சிபான் தலைமையில் சீன நாட்டு அதிகாரிகள் சென்னைக்கு வந்தனர். சென்னை மாநகராட்சி மேயர் உள்ளிட்ட அதிகாரிகளை அவர்கள் நேற்று சந்தித்து பேசினார்கள். காலை 10 மணி முதல் 11.45 மணி வரை நடந்த இந்த சந்திப்பின்போது, சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும் திடக்கழிவு மேலாண்மை, சாலைகள், பொதுசுகாதாரம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப பணிகள் குறித்த விவரங்களை மேயர் சைதை துரைசாமி எடுத்துரைத்தார்.

சொங்கிங் மாநகராட்சி மேயர் ஹூவாங் சிபான் உள்ளிட்ட 5 சீன அதிகாரிகளுக்கு ஆங்கிலம் தெரியவில்லை. அவர்கள் சீன மொழியில் மட்டுமே பேசினார்கள். ஆனால் அவர்கள் சீன நாட்டில் இருந்து ஆங்கிலம் தெரிந்த ஒரு பெண் மொழிப்பெயர்ப்பாளரை அழைத்து வந்திருந்தனர்.  மேயர் சைதை துரைசாமி கூறிய விவரங்களை, அந்த பெண் சீன மொழிக்கு மொழிபெயர்த்து, விவரங்களை எடுத்துரைத்தார். அப்போது பேசிய சைதை துரைசாமி, ‘இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளே ஆச்சரியத்துடன் பார்க்கும் மலிவுவிலை உணவு வழங்கும் ‘அம்மா உணவகம்’ என்ற புரட்சிகரமான திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கியுள்ளார்.

இந்த திட்டத்தை வெளிநாட்டில் இருந்தெல்லாம் பல நிபுணர்கள் வந்து ஆய்வு செய்து செல்கின்றனர்.   ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி, ரூ.3-க்கு தயிர்சாதம், ரூ.5-க்கு சாம்பார் சாதம் என்று மலிவு விலையில், 3 வேளைகளுக்கும் உணவு வழங்கப்படுகின்றன. இதனால், சமுதாயத்தின் பின்தங்கியவர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.22 இருந்தால், 3 வேளையும் சாப்பிட்டு பசியில்லாமல் வாழ முடியும். பொதுவுடைமை நாடான சீனாவிலும் ‘அம்மா உணவகம்’ திட்டத்தைபோல் ஒரு திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தவேண்டும்’ என்று கோரிக்கை முன்வைத்தார்.  இந்த தகவலை மொழிப்பெயர்ப்பு பெண் சீன மொழியில் மொழிபெயர்த்து கூறியபோது, மேயர் ஹூவாங் சிபான் உள்ளிட்ட சீன அதிகாரிகள் புருவத்தை உயர்த்தி ஆச்சரியத்துடன் கேட்டனர்.

மேலும், கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளுக்கு சீன நாட்டை சேர்ந்த ஒப்பந்த நிறுவனங்களை பங்கேற்ற செய்வது, ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளை சென்னையில் அமைக்க முன்வருவது, மருத்துவ உள்ளிட்ட கல்வித் தொடர்பாக இருநாட்டு மாணவர்களுக்கு இடையே பரிமாற்றம் செய்துகொள்வது, மோனோ ரெயில் திட்டத்தை சென்னையில் கொண்டுவருவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.  இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு, சென்னை மாநகராட்சியின் நிர்வாக பணிகளை எடுத்துரைத்தனர்.

Comments
Loading...