தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசியல் கைதிகளுக்கு உடன் மருத்துவ சிகிச்சை வழங்க உத்தரவு!

strikeகொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப்  போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு மருத்துவ சிகிச்சைகளை வழங்குமாறு கொழும்பு நீதிமன்றத்தால் நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 14 தமிழ் கைதிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அவர்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அவர்கள் நேற்று  நீதிமன்றத்தில் உள்ள எதிராளிகள் கூண்டில் நிறுத்தப்படவில்லை என்று அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல்கொடுக்கும் அமைப்பைச் சேர்ந்த அருட்தந்தை சத்திவேல் தெரிவித்துள்ளார்.
உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக இந்த கைதிகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்களின் வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு அறிவித்ததோடு,அவர்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொடுப்பது அவசியம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதி, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள சந்தேகநபர்களுக்கு தகுந்த சிகிச்சையை பெற்றுக்கொடுக்குமாறு உத்தரவிட்டதாக அரசியல் கைதிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.

இந்த சந்தேகநபர்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய சட்டநடவடிக்கை குறித்து ஸ்ரீலங்கா சட்ட மா அதிபரின் ஆலோசனை இதுவரை கிடைக்கவில்லை என்று பொலிஸார்  நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதன்படி சந்தேகநபர்களை வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அன்றைய தினம் அவர்கள் தொடர்பாக சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறும் நீதிபதி  உத்தரவிட்ட்டுள்ளார்.

Comments
Loading...