Designed by Iniyas LTD
ஊடகவியலாளர்களை வெளியே செல்லுங்கள் என விரட்டிய கிராம அலுவலர்!
வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள கிராம அலுவலரின் அலுவலகத்திற்கு இன்றைய தினம் தகவல் பெறுவதற்காக சென்ற ஊடகவியலாளர்களை கிராம அலுவலர் வெளியேற்றியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கிராம அலுவலரின் அலுவலக வாயிலில் வைத்து பலர் முன்னிலையில் வெளியே செல்லுங்கள் என கிராம அலுவலர் ஊடகவியலாளர்களை வெளியேற்றியுள்ளார்.
வறட்சி நிவாரணம் வழங்கலில் அப்பகுதியில் பல மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை கிராம அலுவலரிடம் கேட்கச் சென்ற மக்களை கிராம அலுவலர் அநாகரிகமாக பேசி அனுப்புவதாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த பகுதிக்குச் சென்ற ஊடகவியலாளர்கள் தமக்கு கிடைத்த தகவலின் உண்மை தன்மை குறித்து அறிவதற்காக கிராம அலுவலரின் அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டுள்ளனர்.
இதன்போது, அலுவலக வாயிலுக்கு வந்த அப்பகுதி கிராம அலுவலர் கி.கஜந்தன், ஊடகவியலாளர்களை பார்த்து உங்களை யார் உள்ளே விட்டது. உடனே வெளியே செல்லுங்கள் என அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் அநாகரிகமாக நடந்து அவர்களை வெளியேற்றியுள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசாவின் கவனத்திற்கு குறித்த விடயத்தை தொலைபேசி மூலம் அறிவித்துள்ளனர்.
ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அந்த அரசாங்கத்தின் கீழ் செயற்படும் அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும், பலர் முன்னிலையில் அவமானப்படுத்தும் வகையிலும் நடந்து கொள்வது ஊடக சுதந்திரத்தை மீறும் செயல் என பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.