தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கர்நாடகா வன்முறை: 30 நாட்களுக்கு பின்பு பெங்களூருக்கு வாகனங்கள் இயக்கம்

lorryகடந்த ஒரு மாதத்துக்குப் பிறகு தமிழக பதிவெண் கொண்ட லாரிகள், கார்கள் கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு புதன்கிழமை முதல் இயக்கப்பட்டன. அதேபோல, கர்நாடகா மாநில அரசுப் பேருந்துகளும் ஒசூர் வந்தன.
தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்கக் கூடாது என்று வலியுறுத்தி கர்நாடகத்தில் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள் சார்பில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்துவந்தன. இதனால் அன்று முதல் தமிழக அரசு வாகனங்கள் கர்நாடக மாநிலத்துக்கு இயக்கப்படவில்லை. அனைத்து பேருந்துகளும் ஒசூருடன் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில், கடந்த மாதம் 12-ஆம் தேதி கர்நாடகத்தில் வன்முறை சம்பவங்கள் வெடித்தன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 35 ஆம்னி பேருந்துகள், 46 லாரிகள், 20-க்கும் மேற்பட்ட கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அதேபோல, நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக பதிவெண் கொண்ட கார்கள், லாரிகள் சேதப்படுத்தப்பட்டன.
தமிழக-கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி நினைவு வளைவு அருகே துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், தற்போது கர்நாடகத்தில் நிலைமை சற்று சீரடைந்துள்ளதால், இரு மாநிலங்கள் இடையே போக்குவரத்தை தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக இரு மாநில காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, தமிழகம்-கர்நாடகம் இடையே புதன்கிழமை முதல் சரக்குப் போக்குவரத்து தொடங்கியது. ஒசூர் சூசூவாடியில் நிறுத்தப்பட்டிருந்த தமிழக பதிவெண் லாரிகள் ஒரு கர்நாடகத்துக்குப் புறப்பட்டுச் சென்றன.
அதேபோல, கர்நாடகத்தில் இருந்து அந்த மாநில பதிவெண் கொண்ட வாகனங்களும், தமிழ்நாட்டுக்கு வந்தன. மேலும், கர்நாடக மாநில அரசுப் பேருந்துகளும் ஒசூருக்கு இயக்கப்பட்டன. அதேபோல, சில தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டன. வியாழக்கிழமை முதல் தமிழக அரசுப் பேருந்துகளும் பெங்களூருக்கு இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மாநில எல்லையில் போக்குவரத்து தொடங்கியதை சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. நாகராஜன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும், மாநில எல்லையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி மகேஷ்குமார் மற்றும் ஒசூர் உதவி எஸ்.பி ரோஹித் நாதன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து சேலம் சரக டி.ஐ.ஜி. நாகராஜன் கூறியதாவது:
கர்நாடகத்துக்கு தற்போது அனைத்து சரக்கு வாகனங்களும் சென்று வருகின்றன. அதேபோல, கர்நாடக மாநில வாகனங்களும் தமிழகத்துக்கு வந்து செல்கின்றன. தமிழக அரசுப் பேருந்துகளும் விரைவில் பெங்களூருக்கு இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மாநில எல்லையில் பதற்றம் தணிந்ததைத் தொடர்ந்து, ஒசூர் அருகே அத்திப்பள்ளி நினைவு வளைவு அருகில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த துணை ராணுவப் படையும் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.
இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து சீரடைந்ததால், பொதுமக்கள், பயணிகள், வியாபாரிகள், தொழில் துறையினர் மகிழ்ச்சியடைந்தனர்.

Comments
Loading...