தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சென்னையில் காவலர்கள் வன்முறையில் ஈடுபடும் காட்சி: சைபர் குற்றப்பிரிவு ஆய்வு

fire1சென்னையில் நடந்த வன்முறையில் காவலர்களும் தீ வைப்பது, வாகனங்களை உடைப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது போன்று வெளியான விடியோ காட்சி குறித்து சைபர் குற்றப்பிரிவு போலீஸார் ஆய்வு செய்து வருவதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை மாநகரம் செவ்வாய்க்கிழமை முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியது. காமராஜர் சாலை தவிர்த்து அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து சீரானது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

காட்சி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் காவலர்கள் வன்முறையில் ஈடுபடுவது போன்று வெளியான காட்சிகள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அந்த காட்சிகளை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று காவல் ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

குடிசைக்கு தீ: முன்னதாக, சென்னை நடுகுப்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தின்போது ஒரு காவலரும், ஒரு பெண் காவலரும் குடிசை ஒன்றுக்கு தீ வைப்பது போன்ற காட்சி சமூக ஊடகங்களிலும், காட்சி ஊடகங்களிலும் வெளியானது. இதேபோல், இரு காவலர்கள் மோட்டார் சைக்கிளை தாக்கி உடைப்பது போன்ற காட்சியும் வெளியானது. இதற்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு சமூக அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

Comments
Loading...