Designed by Iniyas LTD
தமிழகத்தில் தாய்ப்பால் வங்கி தொடக்கம்!
பிறந்த குழந்தைக்கு முழுமையான உணவாக இருப்பது தாய்ப்பாலே. ஆனால் அண்மைக்காலங்களில் தாய்ப்பால் தர முடியாத, அல்லது தாய்ப்பால் குறைவாக சுரப்பது என பல பிரச்னைகளை இளம் தாய்மார்கள் சந்திக்கின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டுள்ளது.
தாய்க்கு நிகரான ஒருவர் உலகில் இருக்கமுடியாதென்றால் தாய்ப்பாலுக்கு நிகரான உணவும் உலகில் இல்லை. பிறந்தது முதல் இரண்டு வயது வரை தாய்ப்பால் மிகவும் முக்கிய உணவாக குழந்தைக்கு இருக்கிறது. அதிலும் முதல் ஒரு வருடம் வரை தாய்ப்பால்தான் குழந்தைக்கு பிரதான உணவாக இருக்கிறது. காரணம், தாய்ப்பால் எளிதில் செரிக்கக்கூடியது. அதில் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற அமிலங்களையும், உயர்தரபுரதங்களும் இருக்கின்றன.ஆனால் தற்போதுள்ள சூழலில் தாய்ப்பால் தரும் தாய்மார்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறுகிறது ஒரு சர்வே.
இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக தாய்ப்பால் வங்கியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. சென்னை அரசு மருத்துவமனை உட்பட 7 இடங்களில் இந்த தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு தாய்ப்பால் தரும் தாய்மார்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. பின்பு அவர்களுக்கு செவிலியர்களால் கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. பின்னர் சேமிப்பு பகுதியில் தாய்மார்களிடம் இருந்து நவீன கருவிகளை கொண்டு தாய்ப்பால் எடுக்கப்படுகிறது.
இவ்வாறு பெறப்படும் தாய்ப்பால் குளிர்பதனக்கருவியில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. 62 டிகிரியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கிருமி நீக்கம் செய்த பிறகு மீண்டும் உறையவைக்கப்படுகிறது. தகுந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு உறைநீக்கம் செய்யப்பட்ட பின் குழந்தைக்கு தாய்ப்பால் வழங்கப்படுகிறது. இதுபோல சேகரிக்கப்படும் தாய்ப்பாலை 6 மாதம் வரை உபயோகப்படுத்தலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
தாய்ப்பால் வங்கியின் மூலம் பாலை தன் குழந்தைக்கு மட்டுமல்லாமல் மற்ற குழந்தைகளுக்கும் தானமாக வழங்குகின்றனர் இந்த தாய்மார்கள். இதனால் தாய்மார்களுக்கு சுரக்கும் தன்மை அதிகரிப்பதாகவும் உடல் நலன் அதிகரிப்பதாகவும் மேலும் புற்றுநோய் தாக்கும் அபாயம் இல்லை என்றும் கூறுகின்றனர் மருத்துவர்கள். தன் குழந்தைக்கும் சேர்த்து பிற குழந்தைக்கும் தாய்ப்பால் தருவதை மகிழ்ச்சியாகவும் கருதுகின்றனர் தாய்மார்கள்.
நன்றி : புதியதலைமுறை