Designed by Iniyas LTD
புதுக்குடியிருப்பு சந்தை கற்காலம் போல் ஆலமர மரங்களின் கீழ் செயல்பட்டு வருகிறது – சி. சிவமோகன்
யுத்த காலத்தில் விமான தாக்குதலுக்கு பயந்து ஆலமர மரங்களின் கீழ் சந்தைகள் நடந்தது போல் இன்றும் யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்த பின்பும் கூட புதுக்குடியிருப்பு சந்தை கற்காலம் போல் ஆலமர மரங்களின் கீழ் செயல்பட்டு வருகிறது என வைத்திய கலாநிதி சி. சிவமோகன் ஆதங்கத்துடன் கருத்து தெரிவித்தார்.
முல்லை மாவட்டத்தில் வருமானம் கூடிய சந்தை புதுக்குடியிருப்பு சந்தையாகும். மக்களின் வரிப்பணத்தில் எமது மக்களுக்காக 50 லட்சம் பெறுமதியில் ஒரு மீன் சந்தை அமைக்கப்பட உள்ளது. அதை அமைப்பதில் பலத்த இழுபறி நிலவிய நிலையில் அண்மையில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந. சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர் சி. சிவமோகன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை செயலாளர் மற்றும் புதுக்குடியிருப்பு சந்தை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் சகிதம் நடைபெற்றது. இறுதியாக உடனடியாக மீன் சந்தைக்குரிய கட்டடத்திற்குரிய வேலைகளை ஆரம்பிப்பது என ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக சந்தை நிர்வாகம் தமிழத்தேசிய கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடக்கூடாது என்ற ராணுவத்தினரின் பலத்த மிரட்டலில் மிரண்டு போயிருப்பதாக தெரிகிறது. எதுவாகிலும் மக்களுக்கான சந்தைக்கான கல்நாட்டும் நிகழ்வு நடந்தால் போதும் என வடமாகாண சபை உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்தார்.