தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழீழத்திற்குத் தூண்டும் யாழ் பல்கலைக்கழகப் போர்!

jaffna university

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முப்பது வருடங்களின் பின்னர் சிங்கள மாணவர்கள் கல்வி கற்க வந்துள்ளனர். இந்த முப்பது வருடங்களாக வடகிழக்கில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் ஏன் கல்வி கற்க முடியாதிருந்தது? தெற்கில் உள்ள பல்கலைக்கழகங்கள் எவ்வாறு இயங்குகின்றன? தெற்கில் உள்ள பல்கலைக்கழங்களில் தமிழ் மாணவர்க்ள எப்படிக் கல்வி கற்கிறார்கள் போன்றவை தொடர்பில் யாழ்ப்பாணத்திற்கு வரும் சிங்கள மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நாட்டின் அரசியல் சூழலை, யதார்த்தத்தை புரிந்துகொள்ள மறுத்தமையினாலேயே யாழ் பல்கலைக்கழகத்தில் இந்தப் போர் வெடித்தது.

கடந்த சில தினங்களின் முன்னர், யாழ் பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நடந்தது. இதில் வரவேற்பில் சிங்கள கண்டிய நடனம் நிகழ்த்தப்படவேண்டும் என்று சிங்கள மாணவர் தரப்பு கோரியது. இதனை தமிழ் மாணவர்கள் எதிர்த்தனர். அத்துடன் காலம் காலமாக பின்பற்றும் தமிழ் முறைப்படியே வரவேற்பு நடக்கும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. இந்த நிலையில் புதுமுக மாணவர் வரவேற்பு நடைபெற்ற தருணத்தில் சிங்கள மாணவர்கள் முறையற்ற ரீதியில் அனுமதி மறுக்கப்பட்ட சிங்கள கண்டிய நடனத்தை இறக்கியபோது அங்கு குழப்பம் எழுந்தது.

தமிழ் மாணவர்கள் மரபுக்கு மாறான இந்தச் செயலை தடுக்க முற்பட்டபோது சிங்கள மாணவர் குழு ஒன்று தமிழ் மாணவர்கள், விரிவுரையாளர்களை தாக்கத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களை தாக்கியுள்ளனர். இங்கு முதலில் வன்முறையை கையில் எடுத்தது சிங்கள மாணவர்களே. அத்துடன் தமிழ் மாணவர்கள்மீதும் விரிவுரையாளர்கள்மீதும் தாக்கி அவர்களை வன்முறைக்குத் தூண்டியதும் சிங்கள மாணவர்களே.

முதலில் ஒரு பல்கலைக்கழகம் என்பது அது அமைந்துள்ள பிரதேசத்தை, தேசத்தை பிரதிபலிக்கும். அங்குள்ள வழக்குகளும் பண்பாடும் அந்தப் பிரதேசத்தை ஒட்டியிருக்கும். அதன் சின்னம், அடையாளம் யாவும் அந்தப் பிரதேசத்தை அடிப்படையாக கொண்டிருக்கும். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றிற்கு வரும் கேரள மாணவர் அங்கு கேரள வணக்க முறையை எதிர்பார்க்க முடியுமா? அல்லது கேரளப் பல்கலைக்கழகம் ஒன்றுக்குச் செல்லும் தமிழக மாணவர் அங்கு தமிழக வணக்கமுறையை எதிர்பார்க்க முடியுமா? நிச்சயமாக இல்லை.

உண்மையில் இவ்வாறு வெவ்வேறு பாகங்களுக்குச் செல்லும் மாணவர்கள் அங்கு தமது பண்பாடுகளை திணிக்காமல், அதை திணிக்க வன்முறை செய்யாமல், அங்குள்ள பண்பாட்டை கற்றுக்கொள்ள வேண்டும். அதன் தனிவத்துவத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் கற்கும் கல்வியில் இதுவே முதன்மையானது. ஆனால் சிங்கள மாணவர்கள் சிங்களப் பேரினவாத சிந்தனையுடன் யாழ் பல்கலைக்கழகத்திலும் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டும் செயல்களில் ஈடுபடுகின்றனர். சிங்கள மாணவர் வருகையின் பின்னர் சிறுபான்மை தமிழ் பேசும் மாணவர்களுக்குப் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

தமிழர் கிராமங்களின் பெயர்களை, தமிழர் தெருக்களின் பெயர்களை சிங்களத்தில் மாற்றுவதுபோலவே இங்குள்ள நடைமுறைறையும் சிங்கள மாணவர்கள் மாற்ற முற்பட்டுள்ளனர். சிங்கள மாணவர்கள் தமது விழாக்களை, விரதங்களை, பண்டிகைகளை கொண்டாட யாழ் பல்கலைக்கழகத்தில் யாரும் தடைவிதிக்கவில்லை. தமிழர் நகரமெங்கும் இராணுவம் வெசாக் கூடு தொங்க விடுவதுபோல சிங்கள மாணவர்களும் பல்கலைக்கழகத்தை வெசாக் கழகம் ஆக்குகின்றனர். இதனை தமிழ் மாணவர்கள் எதிர்க்கவில்லை. ஆனால் ஒரு பல்கலைக்கழகத்தின் மரபான நடைமுறைகளை மாற்றி, அதில் குழப்பத்தை ஏற்படுத்தி, வன்முறையை தூண்டுவது மாணவர்களுக்கு அழகல்ல. அது மாணவரின் செயலுமல்ல.

சிங்கள மாணவர்கள் இவ்வாறு துணிந்து செயற்பட சிங்களப் பேரினவாத சிந்தனையே பின்னணி. ஒன்று இதன் பின் புறத்தில் மகிந்த ராஜபக்ச போன்ற பேரினவாதிகள் இருக்கக்கூடும். அத்துடன் சிங்கள இராணுவம் காணி பிடித்து அபகரிப்பதும் புத்த விகாரை கட்டி பௌத்த மயப்படுத்துவதையும் சிங்கள இராணுவம் ஆமிக்கடை போடுவதையும் பார்க்கும் சிங்கள மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தையும் சிங்கள பல்கலைக்கழகம் ஆக்கினால் என்ன என்றும் தோன்றியிருக்கக் கூடும்.

எப்படியிருப்பினும் இது யாழ் பல்கலைக்கழகம். இது தெற்கின் பல்கலைக்கழகம் அல்ல. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வடகிழக்கு மக்களின் பல்கலைக்கழகம். இது இப்படித் தான் இருக்கும். இலங்கைத் தீவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களின் நடைமுறைகளும் ஒரே நடைமுறையிலா உள்ளன? இல்லையே. ஆனால் நாம் சிங்களவர். இது சிங்கள நாடு. இது சிங்கள தேசியம். இங்கு எங்கள் பண்பாடுதான் இருக்க வேண்டும் என்று சிங்கள மாணவர் நினைத்தால் அது வன்முறையில்தான் முடியும். அது தமிழ் மாணவர்களை தமிழீழத்திற்கே தூண்டும்.

இந்த எதிர்ப்புணர்வை சிங்கள மாணவர் மாத்திரமின்றி, சிங்கள அரசும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழர் தாயகத்தை சிங்கள, சிங்கள பௌத்த மயமாக்கும் சிங்கள அரசு இதை முக்கியமாக புரிந்துகொள்ள வேண்டும். சிங்கள அரசின் ஆதிக்க, அடக்குமுறை, பேரினவாத சிந்தனைகள் ஏற்படுத்தும் எதிர்வினைகள் பாரதூரமானவை. அதில் சிறு பொறியே இந்த நிகழ்வு. வடகிழக்கு முழுவதும் இதனையே சிங்கள அரசு தொடருமாக இருந்தால் இதன் விளைவு கடுமையாய் இருக்கும்.

ஆசிரியர்.
செண்பகம்.
18.07.2016

Comments
Loading...