Designed by Iniyas LTD
ரோந்து சென்ற இந்திய வீரர்களை சுற்றிவளைத்து சீன இராணுவம்
காஷ்மீரின் லடாக் பகுதியில் ரோந்து சென்ற இந்திய வீரர்கள் 100 பேரை, சீன ராணுவத்தின் 300 வீரர்கள் சுற்றிவளைத்து தடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீன அதிபர் இந்தியா வரவுள்ள நிலையில் இதுபோன்ற சம்பவம் நடப்பதால், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு மழுப்பல் பதில் அளித்துள்ளது. இந்தியா – சீனா இடையே எல்லைக்கோடு வரையறுக்கப்படவில்லை. இதனால் இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இருதரப்பு ஒப்பந்தப்படி ஊடுருவல் நடந்தால், அணிவகுப்பு மற்றும் பேனர் மூலம் எச்சரிக்கை விடுக்கப்படுவது வழக்கம். ஆனால், இச்சம்பவம் தொடர்ந்து நடக்கிறது.
காஷ்மீரின் லடாக் பகுதியில் புர்ட்சே என்ற இடத்தில் கடந்த மாதம் 25 கி.மீ தூரம் ஊடுருவி கூடாரம் அமைத்ததாக தகவல் வெளியானது. ஆனால், இச்சம்பவத்தையும் இந்திய ராணுவம் மறுத்தது. இந்நிலையில் லடாக் பகுதியில் டெம்சாக் என்ற இடத்தில் சீன வீரர்கள் 30 பேர் கடந்த 11ம் தேதி 500 மீட்டர் தூரம் வரை ஊடுருவி கூடாரம் அமைத்து தங்கியுள்ளதாக தகவல் வெளியானது. இவர் களுக்கு எதிர்ப்பு தெரிவிக் கும் வகையில் இந்தோ- திபெத் எல்லை போலீசார் 70 பேர் இப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதன்பின் இப்பகுதிக்கு கூடுதலாக ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டனர். இந்நிலையில் லடாக் பகுதியில் ரோந்து பணிக்கு சென்ற இந்திய வீரர்கள் 100 பேரை, சீன ராணுவத்தினர் 300 பேர் சுற்றிவளைத்து தடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருதரப்பினர் இடையே ஆவேச வாக்குவாதங்களும், கைகலப்பும் நடந்ததாக கூறப்படுகிறது.
மேலும் லடாக் பகுதி யில் டெம்சாக் என்ற இடத் தில் கால்வாய் அமைக்கும் பணியில் உள்ளூர் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு சீனா கடந்த ஒரு வாரமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கால்வாய் பணியை தடுப்பதற்காக எல்லை கிராமங்களில் வசிக்கும் சீன மக்கள் ஏராளமானோர் அரசு வாகனங்கள் மூலம் டெம்சாக் பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய தொழிலாளர்களை தடுத்தனர். இச்சம்பவத்தை லே பகுதியில் துணை ஆணையர் சிம்ரன்தீப் சிங் உறுதி செய்துள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை இந்தியா வரவுள்ளதால், இச்சம்பவங்களை மத்திய அரசு மழுப்புகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பரூதீன், ‘‘தீர்க்கப்படாத எல்லைப் பிரச்னைகள் குறித்து சீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும். எல்லையில் நடைபெறும் சம்பவங்களை நமது ராணுவத்தினர் பார்த்துக் கொள்வர். இந்தியா- சீனா இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன’’ என்றார்.