Designed by Iniyas LTD
கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்றார் சி.வி.விக்னேஸ்வரன்
இரண்டாம் இணைப்பு
தமிழர் பிரச்சினை குறித்து அரசியல் பேரவைக்கு யோசனைகளை சமர்ப்பிப்பதற்காக, கிளிநொச்சியில் நடத்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்றுள்ளார்.
தேசிய அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதில் உள்ளடக்கப்படவேண்டிய தமிழர் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து ஆராயும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சியில் நடைபெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இந்த கலந்துரையாடல் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட போதிலும், பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டம் ஆரம்பமானது போது கலந்து கொண்டிருக்கவில்லை.
இந்நிலையல், பிற்பகல் 3.30 மணியளவிலேயே அவர் இந்த உயர்மட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதல் இணைப்பு
கிளியில் விசேட கூட்டத்தில் விக்கி பங்கேற்கவில்லை?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல், கரைச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை (21) காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது.
கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் ஆரம்பமாகிய இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இதுவரையில் கலந்துகொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. எனினும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று மாலை இடம்பெறும் அமர்விலேயே கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்றைய சந்திப்பின் போது நாட்டில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு, மக்களின் வாழ்வாதார முன்னேற்றம், மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், டெலோ அமைப்பைச் சேர்ந்த செல்வம் அடைக்கலநாதனும் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
