Designed by Iniyas LTD
கிழித்த தீர்மானம் திருத்தங்களோடு நிறைவேற்றம்!
இலங்கையை சர்வதேச பொறிமுறைக்கு உட்படுத்துமாறு உறுப்பு நாடுகளைக் கோரும் பிரேரணை, தீர்மானமாக வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வட மாகாண சபையில் இன்று இடம்பெற்ற விசேட அமர்விலேயே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் கடந்த அமர்வின்போது, குறித்த பிரேரணை கொண்டு வரப்பட்டது.
இதன்போது, குறித்த பிரேரணை தொடர்பில் அடுத்த அமர்வில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு, இன்றைய அமர்வின்போது எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, “இலங்கையை சர்வதேச பொறிமுறைக்கு உட்படுத்துமாறு உறுப்பு நாடுகளைக் கோருதல்” என்ற பதத்தை குறித்த பிரேரணையில் இணைத்து எம்.கே.சிவாஜிலிங்கம் முன்மொழிந்தார். இதற்கு, கடந்த அமர்வில் முன்மொழிந்த பிரேரணை வேறு, இப்பிரேரணை வேறு என தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் வை.தவநாதன், சபையை சிவாஜிலிங்கம் அவமதித்ததாக தெரிவித்து, எம்.கே.சிவாஜிலிங்கம் முன்மொழிந்த பிரேரணையை சபையில் வைத்து கிழித்தெறிந்தார்.
அத்துடன் வடமாகாண சபையின் உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் பின்னர் கடும் வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற்றதுடன், வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா நடுநிலை வகிக்க, வடமாகாண சபையின் 2 பெரும்பான்மை உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் குறித்த பிரேரணை, தீர்மானமாக திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தில், “2015 ஆம் ஆண்டு ஐ.நா வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும், மற்றும் குறித்த தீர்மானம் தொடர்பில் ஐ.நா மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.