Designed by Iniyas LTD
பயிற்சியில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா – அமெரிக்கா கடற்படைகள்
கொழும்புத்துறைமுகத்தில் தரித்து நிற்கும் அமெரிக்கக் கப்பலான யுஎஸ்எஸ் புளூரிட்ஜ் கப்பலில் இலங்கைக் கடற்படையினருக்கு எதிர்வரும் 31ஆம் திகதிவரை பயிற்சிகள் வழங்கப்படவுள்ள தாக இலங்கைக் கடற்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இருநாட்டு உறவுகளைப் பலப்படுத்தும் முகமாக கடந்த சனிக்கிழமை யுஎஸ்எஸ் புளூரிட்ஜ் கப்பல் முற்பகல் கொழும்பை வந்தடைந்தது. இந்தக் கப்பலில் வந்த 7ஆவது கப்பற் படையணியின் தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் ஜோசப் ஓகொயின், இலங்கை கடற்படைத் தலைமைக் காரியாலயத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தனவைச் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனடிப்படையிலேயே 31ஆம் திகதிவரை தரித்து நிற்கும் அமெரிக்கப் போர்க்கப்பலில் இலங்கை கடற்படை வீரர்களுக்கு பயிற்சியளிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இப்பயிற்சியின்போது இலங்கை வீரர்களுக்கு ஆயுதங்களைக் கையாளுதல், சேதங்களைத் தடுத்தல், இளநிலை அதிகாரிகளுக்கான பரிமாற்றப் பயிற்சிகள், நகர்ப்புற சண்டைப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு கூட்டுப் பயிற்சிகளில் இருநாட்டு கடற்படையினரும் ஈடுபடவுள்ளனர். அத்துடன் 31ஆம் நாள் இறுதியாக இரண்டு நாட்டு கடற்படைவீரர்களும் போர் ஒத்திகைப் பயிற்சியொன்றையும் மேற்கொண்டபின்னர் அமெரிக்கக் கப்பல் நாட்டைவிட்டு வெளியேறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.