Designed by Iniyas LTD
மோடிக்கு வாழ்த்து கடிதம் எழுதிய சம்பந்தன்…
இந்தியப் பிரதமராக மீண்டும் பதவியேற்கும் நரேந்திர மோடியுடன் மிகவும் நெருங்கமாகச் செயலாற்றித் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண ஆவலாகவுள்ளதாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெருவெற்றி பெற்றுள்ள நிலையில் இரண்டாவது முறையாகவும் நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க,எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தனர்.
இந் நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் மோடிக்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அதில் இந்திய மக்களுக்குத் தொடர்ந்தும் அயராது சேவையாற்றும் தங்களுக்கும் தங்கள் அரசாங்கத்திற்கும் எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
இத்தருணத்தில் இலங்கை மக்களுக்கு குறிப்பாகத் தமிழ் பேசும் மக்களுக்கு தங்களது அரசும் இந்தியாவும் நல்கிய அனைத்து உதவிகளிற்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் எனவும் இரா சம்பந்தன் கூறியுள்ளார்.
மேலும் வருங்காலங்களில் இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு நிறைவான நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையிலான ஒரு நிரந்தரத் தீர்வை எட்டும் முகமாகவும், தெற்காசிய பிராந்தியத்தில் சமாதான முன்னேற்றத்தினையும் உறுதித்தன்மையையும் நிலைநாட்டும் முகமாகவும் மிகநெருங்கிச் செயலாற்ற ஆவலாகவுள்ளதாகவும் இராசம்பந்தன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.