தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்…மாணவர்கள் புறக்கணிப்பு…

நாட்டில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சில பல்கலைக்கழகங்கள் இன்று (புதன்கிழமை) மீள திறக்கப்படவுள்ளன.

குறிப்பாக யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களும் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி முதல் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளில் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் அனைத்துக்குமான பரீட்சைகள் எதிர்வரும் 27ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகி நடைபெறவுள்ளன.

எனினும், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கும்வரை கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்கப் போவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

இதனை எழுத்து மூலமாக யாழ் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரிக்கு மாணவர் ஒன்றியத்தினர் அறிவித்துள்ளனர்.

இதேவேளை கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலை பீடத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்தோடு ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதவள மேம்பாட்டு பீடங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதேபோல கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானம் பீடம், மருத்துவ பீடம் என்பவற்றின் கல்வி நடவடிக்கைகளும் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...