Designed by Iniyas LTD
வட மாகாண முதலமைச்சருக்கு கொலை மிரட்டல்…
மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து தன்னை கட்டுப்படுத்த முயற்சிப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு முதலமைச்சரிடம் வாரம் ஒரு கேள்வி பதில் பிரிவில், ஊடகவியலாளர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதனால், மேலதிகப் பாதுகாப்பை பெற முடியாதா? என வினவிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள முதலமைச்சர் தனக்குப் போதுமான பாதுகாப்பு சட்டப்படி வழங்கப்பட்டுள்ளதாகவும் தேவையேற்படின் மேலதிக பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் பரிசீலிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
தனது உயிரிற்கு அஞ்சி மக்களுக்கான கடமைகளை செய்யாமல் தான் இருக்க போவதில்லை எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ஷ அரசாங்கம் வெளிப்படையாக தன்னை கட்டுப்படுத்தியதாகவும், எனினும் தற்போது சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள அரசாங்கத்தால் அவ்வாறு கட்டுபடுத்த முடியாது எனவும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டமையை இன்று சர்வதேசமும் உணர்ந்து கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு ஜெனீவா இதுவரையில் கொடுத்துள்ள காலக்கெடு விரைவில் முடிவுக்கு வரப்போவவதாகவும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
இந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கம் செய்வதறியாது தடுமாறுவதாகவும் பொம்மைகளை பெற்றுத்தருவதாக வாக்களிக்கின்றார்களே தவிர, 70 வருடப் பிரச்சினைக்குத்தீர்வு வழங்குவதாகக் கூறுவதில்லை எனவும் முதலமைச்சர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.