Designed by Iniyas LTD
மகிந்த மிக மோசமான வார்த்தையை வெளிப்படுத்தியுள்ளார் – செல்வம் அடைக்கலநாதன்
அரசாங்கமும் ஜனாதிபதியும் தமிழ் மக்களையும் அவர்களின் பிரதிநிதிகளையும் நாயை விடவும் மோசமாகவே கருதுவதாக தனது சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பாகவும் தமிழ் மக்கள் சார்பாகவும் நாம் அவரது உரையை வன்மையாக கண்டிக்கின்றோம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கமும் ஜனாதிபதியும் தமிழ் மக்களையும் அவர்களின் பிரதிநிதிகளையும் நாயை விடவும் மோசமாகவே கருதுவதாக தனது சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு நாட்டின் ஜனாதிபதி தனது வாயில் இருந்து மிக மோசமான வார்த்தையை வெளிப்படுத்தியுள்ளார். இன்று நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. கடல் வளத்தில் நாம் தொழில் செய்யமுடியாத நிலை காணப்படுகின்றது. எமது மக்கள் அவர்களின் உறவினர்கள் வீடுகளிலும் நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள நிலையில் எமது பூர்வீக நிலங்கள் பாதுகாப்பு வலயம் என தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு குவிக்கப்பட்டுள்ளது. அதிகளவான இராணுவத்தினர் வடக்கு கிழக்கில் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு எமது மக்கள் இந்த தேசத்தில் நசுக்கப்படுகின்ற நிலையை இந்த அரசாங்கம் உருவாக்கியுள்ளது.
இந் நிலையில் அவர் போகின்ற இடங்கள். அவர் செய்கின்ற வேலைகள், அவர் ஜனாதிபதி தேர்தலுக்காக செய்யும் முஸ்தீபுகளுக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பும் பங்கேற்க வேண்டும் என நினைப்பதற்கு தமிழ் மக்களோ கூட்டமைப்போ எடுப்பார் கைப்பிள்ளை இல்லை. சிங்கள குடியேற்றங்கள் செய்யப்படவேண்டும் என்ற ரீதியில் அவர் உரையாற்றியுள்ளார். அந்தவகையில் பார்க்கும் போது எமது பூர்வீகத்தை இல்லாதொழிக்கும் செயற்பாட்டை அரசு திட்டமிட்டு செய்கின்றது.
அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிங்கள மக்களின் வாக்கு குறைந்து விடும் என்ற பயத்தினால் தற்போது தமிழ் மக்களின் வாக்குகளை பெறும் செயற்பாட்டில் ஜனாதிபதி இறங்கியுள்ளார். எம்மையும் அழைத்து தனது செயற்பாட்டை நிறைவேற்றி எமது ஒத்துழைப்பும் கிடைத்தாக காட்ட அவர் எண்ணியுள்ளார் எனபதனை நாம் ஊகித்துக் கொண்டோம். இவ்வாறான நிலைகளை நாம் கருத்தில் கொண்டே அவரது வருகையில் கலந்து கொள்வதை புறக்கணித்திருந்தோம். இவ்வாறான செயற்பாட்டை நாம் எதிர்ப்போம் என்பதுடன் போராடுவோம். எனவும் தெரிவித்தார்.