தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சம்பூர் காணி விடுவிப்பு வழக்கிற்கு இடைக்கால தடை நீடிக்கப்பட்டுள்ளது

சம்பூர் காணி விடுவிப்பு தொடர்பான இடைக்காலத் தடை நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு ஜூலை மாதம் 10ஆம் திகதிவரை உயர்நீதிமன்றத்தால் நேற்று ஒத்திவைக்கப்பட்டது. சம்பூர் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள காணியொன்றை தனியார் நிறுவனம் ஒன்றின் தொழிற்சாலைக்காக வழங்குவதற்கு கடந்த அரசால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவுக்கே உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.srilanka-court

தொழிற்சாலையை அமைக்கவிருந்த ஸ்ரீலங்கா கேட்வே இன்டஸ்ட்ரீஸ் தனியார் நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவை ஆராய்ந்தபோதே நீதிமன்றம் கடந்த மாதம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இந்நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தபோதும், விசாரணைகளின்றி எதிர்வரும் 10ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. மற்றும் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஆகியோர் கூட்டமைப்பின் சார்பில் உயர்நீதிமன்றத்திற்கு நேற்று சமுகமளித்திருந்ததுடன், ஸ்ரீலங்கா கேட்வே இன்டஸ்ட்ரீஸ் தனியார் நிறுவனம் சார்பில் அதன் பிரதிநிதிகள் சமுகமளித்திருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அரசு கடந்த 2012ஆம் ஆண்டு தமக்கு தொழிற்சாலை அமைப்பதற்கான அனுமதியை வழங்கியிருந்ததாக அந்த நிறுவனம் தமது மனுவில் கூறியுள்ளது. சம்பூர் மக்கள் சுமார் 9 ஆண்டுகளாக சொந்தக் காணிகளில் குடியேறமுடியாமல் இருக்கின்றனர். தொழிற்சாலை அமைக்கும் பணிகளுக்காக சுமார் 4 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய வர்த்தமானி அறிவித்தல் காரணமாக தமக்கு பெருநட்டம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் ஸ்ரீலங்கா கேட்வே இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கூறியுள்ளது.

ஜனாதிபதி, சட்டத்துக்கு முரணாக குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாகவும், அந்த அறிவித்தலை ரத்துசெய்யும் உத்தரவைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் உயர்நீதிமன்றத்திடம் கடந்த மாதம் கோரியிருந்தனர். சம்பூர் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள காணிகளை மக்களின் மீள்குடியேற்றத்திற்காக மீளக் கையளிப்பதாக அரசு அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...