Designed by Iniyas LTD
எதிர்க்கட்சி பதவிக்காக ஜெனீவா செல்கிறதாம் மகிந்த அணி!
எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படாமை உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சி மீதான அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாக தெரிவித்து அவற்றுக்கு எதிராக முறைப்பாடு செய்ய கூட்டு எதிர்க்கட்சி இன்று ஜெனிவா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெனிவாவில் அமைந்துள்ள அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகத்திடம் கூட்டு எதிர்க்கட்சி முறைப்பாடு செய்யவுள்ளது.
கூட்டு எதிர்க் கட்சியினை பிரதிநிதித்துவம் செய்து மூவரடங்கிய குழு நாளை அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகத்தை சந்தித்து 53 பேரின் கையொப்பங்களுடனான முறைப்பாட்டை கையளிக்க உள்ளது. இது தொடர்பில் ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டு எதர் கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும குறிப்பிடுகையில் ,
நல்லாட்சி அரசாங்கத்தின் எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான அடக்குமுறைகளை கண்டித்து ஜெனிவாவில் அமைந்துள்ள அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தில் முறைப்பாடு செய்வதற்காக கூட்டு எதிர் கட்சி இன்று ஜெனிவா செல்கின்றது. பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன மற்றும் உதய கம்மன்பில மற்றும் நான் உட்பட மூவரடங்கிய குழு ஜெனிவா செல்கின்றது. 6 விடயங்களை மையப்படுத்திய நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான முறைப்பாட்டு பத்திரத்தில் கூட்டு எதிர் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் 53 உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.
கூட்டு எதிர் கட்சிக்கு பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்கள் காணப்படுகின்ற நிலையிலும் பிரதான எதிர் கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வில்லை . அதே போன்று பாராளுமன்றத்தில் எவ்விதமான சந்தர்ப்பமும் கூட்டு எதிர் கட்சியினருக்க வழங்கப்பட வில்லை . மாறாக 53 உறுப்பினர்களில் 23 பேரை இது வரையில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்துள்ளனர். இதனை விட பாரிய குற்றச்சாட்டுகளை கொண்ட உறுப்பினர்களும் அமைச்சர்களும் இருக்கின்ற நிலையில் அவர்களுக்கு எதிராக எவ்விதமான நடவடிக்கையும் இல்லை. மேலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கம் கூட்டு எதிர் கட்சியினரை ஒடுக்குகின்றது. இவற்றை நாங்கள் எழுத்து மூலமாகவும் தெளிவாகவும் முறைப்பாட்டில் பதிவு செய்துள்ளோம்.
நாட்டு மக்கள் இதில் ஒரு விடயத்தை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். கூட்டு எதிர்க் கட்சிக்கு ஜெனிவா செல்கின்றதே தவிர அங்கிருக்கும் மனித உரிமைகள் பேரவைக்கு செல்ல வில்லை. ஜெனிவாவில் அமைந்துள்ள அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்திற்கே செல்கின்றது. ஓன்றியத்தின் செயலாளர் நாயகத்தை நாளை வியாழக்கிழமை சந்தித்து நல்லாட்சி அரசாங்கத்தின் அடக்குமுறைகள் தொடர்பில் எடுத்துரைப்போம். இன்னும் 48 மணித்தியாலயத்தில் நல்லாட்சி அரசாங்கம் ஜனநாயகத்தை முழுமையாக மயானத்திற்கு அனுப்ப போகின்றது.
உள்ளுராட்சி மன்ற தேர்தலை எவ்விதமான காரணமுமின்றி அரசாங்கம் ஒத்தி வைக்கின்றது. தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று ஜனாதிபதி , பிரதமர் , சம்மந்தப்பட்ட அமைச்சர் மற்றும் ஆணைக்குழுவின் தலைவர் இவர்கள் யாருக்கும் தெரியாது. இவ்வாறான ஜனநாயக நாடு உலகில் வேறெங்கும் இல்லை. உள்ளுராட்சி தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்தி வைக்கலாம். ஆனால் எப்போது நடத்துவது என்பது தெரியாமல் இருப்பது வேடிக்கையான விடயமாகும். இதை விட மோசமான நிலை எதுவென்றால் தேர்தலுக்கு திகதியின்றி அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் கலைத்தமையாகும். இதனால் தேர்தல் சட்டம் , அரசியல் யாப்பு என அனைத்து விடயங்களும் மீறப்படுகின்றது.
ஆகவே அரசாங்கத்தின் செயற்பாடுகள் நாட்டின் ஜனநாயகத்தை அழிவுப்பாதையில் கொண்டு செல்கின்றது. தற்போதைய அரசாங்கத்தைப் போன்று மஹிந்த ராஜபக்ஷ தேர்தலை ஒத்திவைத்திருந்தால் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபா இலங்கை மீது பொருளாதார தடை விதித்திருப்பார். தட்டிக் கேட்க யாரும் இல்லாததால் நல்லாட்சி அரசாங்கம் ஜனநாயகத்தை மயானத்திற்கு அனுப்பியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.