Designed by Iniyas LTD
பள்ளி குழந்தைகளுக்கு தற்காப்பு பயிற்சி – பிரான்ஸ் அரசு
தீவிரவாதிகளிடமிருந்து தங்களை தற்காத்து கொள்வது எப்படி என்ற பயிற்சி வகுப்புகளை பள்ளி குழந்தைகளுக்கு கற்றுத்தரஉள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல்களால் அந்நாட்டு அரசு பல இழப்புகளை சந்தித்துள்ளது. பிரான்சில் மிகப்பெரிய தாக்குதலாக கருதப்பட்டது ஜிகாதி தாக்குதல், இதன் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.
தற்போது பிரான்சில் சகஜ நிலை திரும்பியுள்ளதால், புதிய பாதுகாப்பு கொள்கையுடன் 12 மில்லியன் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு திரும்பியுள்ளனர். பள்ளிக்கு திரும்பியுள்ள குழந்தைகளுக்கு புதிய திட்டம் ஒன்றை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்தால் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது, மற்றவர்களுக்கு எப்படி உதவ வேண்டும் என்ற பயிற்சி முறை அளிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பயிற்சிகள் ஆண்டிற்கு மூன்று முறை நடத்தப்படும் எனவும், தாக்குதல்கள் நடப்பது போன்ற ஒத்திகையும் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
பள்ளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும், பள்ளி நுழைவாயில்கள் பாதுகாப்பானதாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இப்பயிற்சிகள் 3 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு மட்டும் அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் பாரிசில் ஒருங்கிணைக்கப்பட்ட இஸ்லாமியவாத தாக்குதல் நடைபெற்றதில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அச்சம்பவத்திலிருந்து அந்நாட்டில் அவசர நிலை அமலில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.