Designed by Iniyas LTD
தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு ..
நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று அதிகாலை 4.00 மணிக்கு ஊரங்கு நீக்கப்பட்டுள்ள நிலையில் ,கல்முனை, சாய்ந்தமருது பகுதிகளில் மட்டும் நேற்றிரவு பிறப்பிக்கப்பட்ட ஊடரங்கு உத்தரவு இன்று சனிக்கிழமையும் தொடர்வதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்வதாலேயே குறித்த ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் பயங்கரவாத குழுவின் இருப்பிடத்தை படையினர் நள்ளிரவில் முழுமையாக கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட துப்பாக்கிச் சண்டையின் பின்னர், அங்கு மறைந்திருந்த பலர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும், அங்கு முழுமையான தேடுதல் முடியவில்லையென பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த மோதலிபோது பொதுமகன் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய குழுவினர் சாய்ந்தமருதில் பதுங்கியிருப்பதாக கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில், நேற்று மாலை 7.00 மணியளவில் இராணுவம், விசேட அதிரடிப்படை, பொலிசார் இணைந்து குறித்த வீட்டை சுற்றிவளைத்தனர்.
இதன்போது, வீட்டுக்குள்ளிருந்து பாதுகாப்பு தரப்பினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதனையடுத்து பல மணி நேரமாக அங்கு துப்பாக்கி மோதல் இடம்பெற்றது.
நீண்டமோதலின் பின்னர் தற்கொலையாளிகள் என கருதப்படும் இருவரின் உடலை பாதுகாப்பு தரப்பினர் மீட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதி நெருக்கமான குடியிருப்புக்களை கொண்டு அமைந்துள்ளதால், நள்ளிரவு வரை பயங்கரவாதிகள் பதுங்கிருந்த வீட்டுக்குள் நுழைந்து முழுமையான சோதனை மேற்கொள்ளப்படவில்லையென பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோதலில் சிக்கி மூன்று பொதுமக்கள் காயமடைந்தனர். இதை தொடர்ந்து, முப்படையினரும் களமிறக்கப்பட்டு, சாய்ந்தமருதில் வீடு வீடாக சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது முதற்கட்ட சோதனையில், பதிவுசெய்யப்படாத புத்தம் புதிய வாகனமொன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்து.
குறித்த வாகனம் கடந்த 19ம் அக்கரைப்பற்றில் உள்ள வாகன விற்பனையகம் ஒன்றில் பணம் செலுத்தி வாங்கப்பட்டுள்ளதாகவும்,
தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் சாஹ்ரான் ஹாஷிமின் மைத்துனர் நியாஸ் அந்த வாகனத்தை வாங்கியிருப்பதாகவும், வாகனத்துடன் இரண்டு அடையாள அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்துகிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.