Designed by Iniyas LTD
வவுணதீவுப் பொலிஸார் கொலை தொடர்பில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அஜந்தனை விடுவிக்குமாறு கோரி இரா.சம்பந்தன் கடிதம்…
வவுணதீவுப் பொலிஸ் அதிகாரிகள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளி அஜந்தனை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்திருக்காமல் உரிய கட்டளைகளை மீளப் பெற்று விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வேண்டுகோளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாதுகாப்புச் செயலாளருக்கு கடிதம் மூலம் விடுத்துள்ளார்.

கடந்த 2018.11.30ம் திகதி வவுணதீவுப் பிரதேசத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டனர். அதனுடன் தொடர்புபடுத்தி முன்னாள் போராளி அஜந்தன் கைது செய்து இதுவரை விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கடந்த 21ம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளின் போது வவுணதீவுப் பொலிஸாரின் படுகொலைக்கும் அஜந்தனுக்கும் தொடர்புகள் இல்லை எனவும், அக்கொலையினைச் செய்தவர்கள் வேறு நபர்கள் எனவும் தெரியவந்துள்ளதாக அறிகின்றேன்.
எனவே சந்தேகத்தின் பெயரில் இத்தனை மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அஜந்தனை தொடர்ந்தும் தடுத்து வைத்திருக்காமல் உரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு அவரை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என இரா.சம்பந்தன் பாதுகாப்புச் செயலாளருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.